Tuesday, March 8, 2011

காங்கிரசுக்கு 63 சீட் ஒதுக்க சம்மதித்தது தி.மு.க

சென்னை: "மத்திய அமைச்சரவையிலிருந்து விலகல்' என்ற முடிவை தி.மு.க., எடுத்ததற்கு கோபமடைந்த சோனியா, காங்கிரசுக்கு 63 சீட்கள் வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார். வீராப்பு பேசிய தி.மு.க., வேறு வழியின்றி 63 சீட்களை ஒதுக்க ஒப்புக் கொண்டுள்ளது. தி.மு.க., 61 தொகுதிகளையும், கூட்டணி கட்சிகளுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து இரண்டு தொகுதிகளையும் காங்கிரசுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.

"காங்கிரசின் அணுகுமுறை, கூட்டணியில் நாம் இருப்பதை விரும்பவில்லை என்பதால் மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., விலகும். பிரச்னை அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும்' என்று, தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் என மிரட்டினால், காங்., இறங்கி வரும் என எதிர்பார்த்தது தி.மு.க., ஆனால், மவுனம் காத்தது காங்., தி.மு.க.,வின் தீர்மானத்தைத் தொடர்ந்து, அக்கட்சியின் மத்திய அமைச்சர்கள் அழகிரி, பழனி மாணிக்கம், ஜெகத்ரட்சகன், நெப்போலியன், காந்திசெல்வன் உள்ளிட்டோர் ராஜினாமா கடிதத்தோடு டில்லி சென்றனர். நேரடியாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ராஜினாமா கடிதத்தை தராமல் காலம் தாழ்த்தினர். மத்திய காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது படேல், பிரணாப் முகர்ஜி என ஒவ்வொருவரிடமும் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

 இவர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, " பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து கொண்டிக்கும் இந்த நேரத்தில், அமைச்சரவையிலிருந்து விலகுவதாக அறிவித்து நெருக்கடியை ஏன் தருகிறீர்கள்' என்று கேட்டார். மேலும், "இரண்டு கேபினட் அமைச்சர்கள் விலகினால், அதன் பின்னணி என்ன? என்று கேள்வி எழுப்பி, அதற்கு, எதிர்க்கட்சிகள் பிரதமரின் பதிலை பார்லிமென்டில் தாக்கல் செய்யக் கேட்பார்கள். இதனால், தேவையற்ற சங்கடங்கள் ஏற்படும்' என்றும் தி.மு.க., அமைச்சர்களிடம், பிரணாப் முகர்ஜி கூறினார்.

 முகர்ஜியின் கேள்விக்கு தி.மு.க., அமைச்சர்கள் பதில் ஏதும் கூற முடியாமல் திணறினர். காங்., தலைவர் சோனியாவை நேற்று முன்தினம் இரவு தி.மு.க., அமைச்சர்கள் சந்தித்தனர். அப்போது, "என்னிடம் கூறாமல் அமைச்சரவையில் இருந்து விலகும் முடிவை ஏன் எடுத்தீர்கள். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி ஏழு ஆண்டுகளாக உள்ளது. இந்தக் காலகட்டத்தில், தி.மு.க., - காங்கிரஸ் உறவு நன்றாகவே இருந்துள்ளது. தி.மு.க., உடன் மனக்கசப்பு இருந்தால் கூட காங்கிரஸ் வெளிப்படையாகக் கூறவில்லை. தற்போது நடந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குறித்துக் கூட காங்கிரஸ் வெளியில் தெரிவிக்கவில்லை. அப்படியிருக்கும் போது, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் வருத்தம் ஏற்பட்டதாகவும், அதனால், அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதாகவும் தி.மு.க., வெளிப்படையாகக் கூறியது தவறு' என்று சோனியா கோபப்பட்டார். அதற்கு பதிலளிக்காத தி.மு.க., அமைச்சர்கள், 60 சீட்கள் தருவதில் உறுதியாக இருந்தனர். ஆனால், 63 தொகுதிகள் என்பதில் சோனியா உறுதியாக இருந்தார். கடைசியாக, முதல்வருடன் மத்திய அமைச்சர் அழகிரி பேசி, 61 தொகுதிகள் தருவதற்கு முன்வந்தார்.காங்கிரஸ் தரப்பு தனது கோரிக்கையில் உறுதியாக இருந்தது. இதையடுத்து, கூட்டணி கட்சியினருடன் தி.மு.க., தரப்பில் பேசப்பட்டது.

தி.மு.க., சார்பாக, 61 தொகுதிகள் தரவும், ஏற்கனவே தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பா.ம.க., - கொங்கு, முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் போன்றவற்றில் இரண்டு கட்சிகள், தலா ஒரு தொகுதிகளை விட்டுக் கொடுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் முடிவில், 63 தொகுதிகளை தர தி.மு.க., சம்மதித்தது. ஆனாலும், காங்கிரஸ் கடந்த முறை போட்டியிட்ட 48 தொகுதிகள் தவிர, மீதமுள்ள 15 தொகுதிகளை தாங்களே தேர்வு செய்வோம் என்பதில் காங்கிரஸ் பிடிவாதமாக இருந்தது. இதன் காரணமாக, நேற்று இரு தரப்பிலும் அவசர ஆலோசனைகள் நடந்தன. அதில், காங்கிரஸ் எட்டு தொகுதிகளை தேர்வு செய்து கொள்ளவும், மீதமுள்ள ஏழு தொகுதிகளை பொறுத்தவரை, தி.மு.க., ஒதுக்கும் தொகுதிகளை காங்கிரஸ் ஏற்றுக் கொள்வதென்றும் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த உடன்பாட்டுக்கு காங்கிரஸ் சம்மதித்தது. இதையடுத்து, நேற்று மாலை உடன்பாடு ஏற்பட்டதாக குலாம்நபி ஆசாத் அறிவித்தார். காங்கிரஸ் விரும்பியபடி 63 தொகுதிகளை கடைசியாக பெற்று காங்கிரஸ் வெற்றி பெற்று விட்டது.

No comments:

Post a Comment